*
ராசமணி (தொடர்கதை)
பாகம்:01 | 1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 | 8 | 9 | 10 | 11 | 12

Wednesday, September 20, 2006

நாகமணி மறைந்தது - ராசமணி-9

ராசநாகம் நாகமணி கக்குற இடத்த கவனமா பார்த்து வச்சிருந்தேன். அந்த இடத்துக்கு பக்கமா இருந்தது ஒரு வடலிப்பனை மட்டும் தான். அதனால் அது ஆபத்துன்னு கொஞ்சம் நீங்கி இருந்த உயரமான பனையை தேர்ந்தெடுத்தேன்.

கையில் டார்ச் லைற்றும் ஒரு கலயம் மாட்டுச் சாணகமும் எடுத்துக்கொண்டு முந்தின ராத்திரி இருட்டின பிறகு பனையில் ஏறி வசதியா உக்கார்ந்தேன். கவனமாகப் பார்த்துக்கொண்டு காத்திருந்தேன்.

நடுராத்திரியானதும் நானிருந்த பனைமரத்துக்கு நேர்கீழே ஏழெட்டு அடி தூரத்தில திடீர்னு நாகமணி ஒளிவிட்டது. கொஞ்சநேரம் நாகம் அகல காத்துகிட்டிருந்தேன். கொஞ்சம் பொறுத்து கலயத்திலிருந்து சாணகத்தை எடுத்து உருட்டி நாகமணியை குறி வெச்சு எறிஞ்சேன்.

சட்.

வடலிப்பனையின் ஓலையில் பட்டு சாணகம் சிதறியது. ஏதோ சப்தமும், அசைவும் உணர்ந்த நாகம் விரைந்தோடி வந்து நாகமணியைக் கவ்விக் கொண்டோடியது."

கிழவர் சஸ்பென்சில் நிறுத்தினார். அடுத்து ஒருபெருமூச்சோடு தொடர்ந்தார்.
***
ஏமாந்து விட்டேன்.

மறுமாசம் அந்த இடத்துக்கு நாகம் வரவில்லை. ஆனாலும் புற்றைவிட்டு அதிக தூரம் போக வாய்ப்பில்லை. புற்று எங்கோ பக்கத்தில தான் இருக்கும். அதனால விடாமுயற்சியோட மாசக்கணக்கா காத்துப் பாத்தேன்.

ஏழு மாசம் கழிச்சு விளையின் மறு கோடி மூலையில அதக் கண்டேன். மறுநாள் போய் பார்த்தப்ப வசதியா ஒரு பனை அங்க நின்னுது. அடுத்த அமாவாசைக்கு ரொம்ப கவனமா பனையில் ஏறி உக்காந்து இராத்திரியைக் கழித்தேன்.

சரியா நடுநிசிக்கு நாகமணி தோன்றியது. நேர் மேலேயிருந்து பார்த்துக் கொண்டிருந்த எனக்கே கண்கள் கூசியது. அந்தப் பிரதேசத்தையே தன் செவ்வொளியால் சிவக்கடித்து பளபளவென்று ஒளிவீசியது நாகமணி. கவனமாக சில நிமிசம் பொறுத்து சாணக உருண்டையை ஒளிவீசிக் கொண்டிருந்த நாகமணியின் மேல் எறிந்தேன். உருண்டை குறி பிசகாமல் நாகமணியின் மேல் விழுந்து அதை மூடிக்கொண்டது. நொடிக்குள் அந்தகாரம் சூழ்ந்தது.

அக்கணமே பாம்பும் அந்தகனானது. சக்கரவர்த்தி வேகமாக ஓடியது. அதன் சரசரவென்ற ஓசை என் காதுகளில் நாராசமாய் ஒலித்தது. அந்த இடத்தை சுற்றிச் சுற்றி வருவது போல இருந்தது. திடீரென்று ஒலி நின்றது. அந்த இடம் பூரண அமைதியில் ஆழ்ந்தது.

காற்றும் கூட தன் மூச்சை நிறுத்தியது மாதிரியான நிசப்தம். அந்தகார இருள். நடுங்கும் இதயத்துடன் அதேசமயம் ஒரு சந்தோஷ எதிர்பார்ப்புடன் மரத்தின் மேலேயே இரவைக் கழித்தேன்.

பொழுது புலருமுன் பறவைகளின் ஒலி மெல்லக் கிளம்பியது. இது தான் சமயம். இனி சந்தைக்குப் போகிறவர்கள் நடமாட்டம் ஆரம்பித்துவிடும்...

மெல்லக் கீழிறங்கினேன். கடைசி அடி எடுத்து வைக்குமுன் ஏதோ ஒரு உந்துணர்வில் கொஞ்சம் மேலேறி டார்ச் லைற்றை அடித்தேன். சரியாக நானிருந்த பனைமரத்தைச் சுற்றிக்கொண்டு சக்கரவர்த்தி படுத்திருந்தது. எந்த அசைவும் இல்லை. செத்தது போலத்தான் கிடந்தது. உயிர் இருக்கிறதா என்று தெரியவில்லையே.

இன்னும் சற்று மேலேறி எம்பி பதினைந்து அடிதூரம் தாண்டிக் குதித்து எழுந்தேன்.

டார்ச் லைட் சிதறி விழுந்தது. குனிந்து அதை எடுப்பதற்குள் உஸ்ஸென்ற சீறல் ஒலி.

(கதை வளரும்...)

3 comments:

Hariharan # 03985177737685368452 said...

இது தாங்கள் சந்தித்த உண்மை நிகழ்வா?

துளசி கோபால் said...

இப்பத்தான் யதேச்சையா இந்தப் பக்கம் வந்தெனுங்க.
அடடா.... என்னமா கதை சொல்றீரு.
ஒம்போதையும் ஒரே மூச்சுலே படிச்சுட்டேன்லெ.
செம விறுவிறுப்பு. ஹைய்யோடா......
ஆமா.... இத்தனை நாள் எங்கே இருந்தீர்?

வலைஞன் said...

//Hariharan said...
இது தாங்கள் சந்தித்த உண்மை நிகழ்வா?//

துவக்கம் முதலே படித்தீர்களா? இப்படியானால் இப்படி சந்தேகம் எழுந்திராது. ஆனால் உண்மையிலேயே எங்களூர் தாத்தாக்களும் பாட்டிகளும் சொன்ன கதைகள். வேறொரு பின்னணியில் (தொடர்)கதையாக வடித்து தந்திருக்கிறேன்.

துளசியக்கா

உங்களை மாதிரி ஆட்களைத்தான் காணவில்லையேன்னு ரொம்ப வருத்தப் பட்டுக்கிட்டு இருந்தேன். வருகைக்கு நன்றி.

*