*
ராசமணி (தொடர்கதை)
பாகம்:01 | 1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 | 8 | 9 | 10 | 11 | 12

Sunday, October 29, 2006

வாய்மொழி

அந்த விண்கலம் ஆகாயத்தில் விரைந்து கொண்டிருந்தது. அது வட்டமாக சற்றுத் தட்டையான பூகோள வடிவில் இருந்தது. பம்பரம் சுழல்வது போலச் சுழன்று கொண்டே வேகமாக ஆகாய வெளியில் அந்த விண்கலம் பயணித்தது. அது செவ்வாய்க் கிரகத்திலிருந்து பூமிக்கு அனுப்பப் பட்ட விண்கலம். அதில் இருந்த மூன்று செவ்வாய்க் கிரகவாசிகளும் செம்மொழியில் பேசிக் கொண்டிருந்தார்கள்.

"நம்முடைய செம்மொழி பூமிவாசிகளுக்கு எப்படித் தெரிந்தது என்பதுதான் ஆச்சரியமாக இருக்கிறது." என்றது செம்பியன் என்ற செவ்வாய்வாசி.

"அது மட்டுமல்ல ஆழமான அரசியல் அறிவுடன் திருக்குறள் என்ற நூலை பூமிவாசி ஒருவர் எழுதியிருப்பது அதைவிட ஆச்சரியம்!" அறிவழகன் என்ற இன்னொரு ஜீவி உரைத்தது.

"அதனால்தானே பூமிக்குச் சென்றே ஆக வேண்டும் என்று நமது தலைவர்கள் தீர்மானித்து நமது வீஞ்ஞானிகளின் உதவியால் நம்மை அனுப்பியிருக்கிறார்கள்." பூங்குழலி என்ற மூன்றாவது ஜீவி பதிலளித்தது.

அவர்கள் சற்றேறக்குறைய மனித எலும்புக் கூடு போலத்தான் காட்சியளித்தார்கள். எலும்புகளின் மேல் நேரடியாக தோலைப் போர்த்தியது போன்ற தோற்றம். சதை கிதை எதுவும் இருப்பதாகத் தெரியவில்லை. அவர்களின் சிவப்பு நிறத்தோல் வெளிச்சத்தில் நியான் விளக்குப் போல ஒளிர்ந்தது. தலையில் பின்புறமும் இரண்டு கண்கள். காது மூக்கு எதுவும் இல்லை. தலையில் ஆன்டனா போல ஏதோ ஒன்று இருந்தது. அதிலிருந்து குழல் போல ஒன்று அவர்கள் பேசும்போதும் உண்ணும்போதும் வெளியே வந்து சென்றது. கைகளில் நகங்கள் இல்லை. மூட்டுகள் நாற்புறமும் சுழலக் கூடியதாக இருந்தது. பூங்குழலிக்கு மட்டும் கழுத்துக்குக் கீழே....... வேறொன்றுமில்லை இரண்டு கறுப்பு மச்சங்கள் இருந்தன. மொத்தத்தில் இவர்கள் செவ்வாய்க் கிரக உயிர்கள். இல்லை இல்லை செவ்வாய்க் கிரக மனிதர்கள். இனி அஃறிணை வேண்டாம். உயர்திணையிலேயே அழைப்போம்.

இவர்களுக்கு பிறப்பும் இல்லை. இறப்பும் இல்லை. அதனால் எண்ணிக்கை கூடாமல் குறையாமல் அறிவை மட்டும் விருத்தி செய்து கொண்டு செவ்வாய்க் கிரகத்தில் வாழ்ந்து வருகிறார்கள்.

செவ்வாய்க் கிரகத்திலிருந்து இவர்கள் பூமிக்குப் புறப்பட காரணமாக அமைந்த சம்பவங்கள் சில மாதங்களுக்கு முன் நடந்தன. (பூமிவாசிகளுக்கு ஆண்டுகள்!)

செவ்வாய்க் கிரக வான்வெளியில் அடையாளம் காண முடியாத பொருள் ஒன்று நுழைவது நுண்வெளிகாட்டியால் கண்டு பிடிக்கப்பட்டது. பிறகு அது மறைந்து விட்டது. சில தினங்கள் கழித்து விசித்திரமான ஒரு சிறிய பொருள் செவ்வாய்க் கிரக மண்ணில் வந்து இறங்குவதை கிரகவாசிகளில் சிலர் கண்டு அவர்களின் மைய நிர்வாகத்திற்குத் தகவல் கொடுத்தனர். செவ்வாய் வீரர் படை உடனே அதைத் தேடத் தொடங்கியது. மிகுந்த தேடுதலுக்குப் பிறகு அவர்கள் அதைக் கண்டு பிடித்தார்கள்.

அது ஒரு பந்து போல இருந்தது. உருண்டு உருண்டு நகர்ந்து கொண்டிருந்தது. அவர்கள் அருகில் சென்றதும் அது விலகிச் சென்றது. அதை விரட்டிச்சென்று பிடிக்க முயன்றும் முடியாமல் போக்குக் காட்டியது. அவர்கள் திட்டமிட்டு சுற்றி வளைத்தார்கள். எனினும் கிட்ட நெருங்கி பிடிக்க முயலும்போது வழுக்கிக் கொண்டு சென்றது. கடைசியில் தீவிர முயற்சி செய்து அதை ஒருவித வலையை வீசிப் பிடித்தார்கள்.

அதை மிகப் பாதுகாப்போடு தங்கள் ஆராய்ச்சி சாலைக்குக் கொண்டு போய்ப் பரிசோதித்தார்கள். கடும் சிரமத்திற்குப் பின் அதைப் பிரித்துப் பார்த்தார்கள். உள்ளே பாதுகாக்கப்பட்ட இரண்டு பெட்டிகள் இருந்ததன. அதன் வெளிப்புறத்தில் ஏதோ எழுதப்பட்டிருந்தது. அதில் இருந்த எழுத்துக்களை அவர்களால் படிக்க முடியவில்லை. பெட்டிகளைத் திறந்து ஆராய முடிவு செய்தார்கள். எந்த சேதமும் ஏற்படாதவாறு பாதுகாப்பான அறைக்குள் வைத்து பெட்டிகள் திறக்கப்பட்டன.

அந்தப்பெட்டிகளுள் ஒன்றில் பூமியின் காகிதங்கள் சுருள் சுருளாக இருந்தன, சில புத்தகங்களும் இருந்தன. இன்னொன்றில் சிறிய வட்ட வடிவ தகடுகள் இருந்தன. தகடுகளைப் பரிசோதித்த போது அவை மின்காந்தத் தகடுகள் எனப் புரிந்தது. அதில் ஏதோ செய்தி பொதிந்திருக்கலாமென்று அதை ஆராய மின்னணு ஆய்வகத்திற்கு எடுத்துச் சென்றார்கள்.

காகிதச் சுருள்களை எடுத்துப் பிரித்த போது ஒவ்வொன்றிலும் ஏதோ வெவ்வேறு வடிவங்கள் எழுதப் பட்டிருந்தன. அவை ஏதோ எழுத்துக்கள் எனப்புரிந்து மொழியியல் விஞ்ஞானியிடம் ஒப்படைக்கப் பட்டது. தீவிரமாக ஒவ்வொன்றாக பிரித்து ஒன்றும் புரியாமல் 22வது சுருளை எடுத்துப் பார்த்துவிட்டு அலட்சியத்துடன் 23வது சுருளைப் பிரித்து "ஆ"வென்று அலறினான் செவ்வாய்க் கிரக மொழியியல் விஞ்ஞானி.

அருகில் இருந்த உதவியாளர்கள் பதறி "என்ன" என்க "செ...செ..செம்மொழி" எனக் குழறினான். சக விஞ்ஞானி அதை எடுத்துப் படிக்க அதில் தமிழில் எழுதியிருந்தது.

'மொழி: தமிழ்.
பூமியிலிருந்து செவ்வாய்க் கிரகத்துக்கு.
(ஆண்டு, மாதம்,
தேதி குறிப்பிடப் பட்டிருந்தது)
இத்துடன் உள்ள குறுவட்டுகளில் உலக
இலக்கியங்களின் பதிவுகள் உள்ளன.
தமிழிலிருந்து: திருக்குறள்.'

இதற்குள் குறுவட்டுகளில் இருந்த மின்வடிவங்களை வாசித்த மின்னணு விஞ்ஞானியும் திருக்குறளை அடையாளம் கண்டுவிட தங்களின் செம்மொழி பூமியில் தமிழ் என்ற பெயரில் விளங்குவதாகப் புரிந்து கொண்டனர். திருக்குறள் அவர்களுக்கு மிகுந்த ஆச்சரியத்தை அளித்தது. அதில் பொதிந்திருந்த கருத்துகள் தங்கள் கிரக மகா ஞானிகளின் கருத்துக்களைவிட மேம்பட்டு இருந்தது ஆச்சரியத்தை அளித்தது.

பூமிவாசிகளுடன் தங்கள் மொழியிலேயே பேசலாம் என்று அறிந்தவுடன் பூமிக்கு விண்கலம் ஒன்றில் மூவரை அனுப்ப ஏற்பாடாயிற்று. அதில் பூமியில் இருந்து வந்த திருக்குறளின் நகலும் இருந்தது.

இப்படித்தான் செம்பியன், பூங்குழலி, அறிவழகன் என்னும் செவ்வாய்க் கிரக விண்வெளி வீரர்கள் பூமிக்குப் புறப்பட்டனர். இதோ அவர்கள் பூமியை நெருங்கி விட்டனர்....இதோ பூமியின் சுற்றுவட்டப் பாதையில் நுழைந்து விட்டனர். சரியான இறங்குதளம் எதிர்நோக்கி பூமியைச் சுற்றி வநதவர்கள் ஒரு பரந்த பூவெளி கண்டு அங்கே இறங்கத் தீர்மானித்தார்கள்.

அவர்கள் ஆஸ்திரேலிய நிலப்பரப்பில் தரையிறங்கினார்கள். விவசாயி ஒருவர் இந்த பறக்கும் தட்டைப் பார்த்து தகவல் தந்ததில் ஆஸ்திரேலியப் போலீஸ் விரைந்து வந்தது. இந்த வினோதமான உருவங்களைப் பார்த்து பயந்தார்கள். எப்படி இவற்றை பிடிக்கலாம் என்று திட்டமிட்டபோது அவர்களாகவே வந்து வணக்கம் கூறியதில் வியந்து மூவரையும் காரில் ஏற்றி காவல்துறை தலைமையகத்துக்கு கொண்டு போனார்கள்.

அவர்களின் கேள்விகளுக்கெல்லாம் செம்மொழியில் பதில் சொல்லி திருக்குறளை எடுத்துக்காட்டியும் ஆஸ்திரேலிய ஆங்கிலேயர்களுக்குப் புரியவேயில்லை. இதற்குள் ஆஸ்திரேலிய விஞ்ஞானக் கழகத்திலிருந்து இரண்டு விஞ்ஞானிகள் காவல்துறை அலுவலகத்துக்கு வந்து விட்டனர். அவர்களுக்கும் ஒன்றும் புரியவில்லை.

இவர்களை விஞ்ஞானக் கழகத்துக்குக் கொண்டு போகப் போவதாகச் சொன்னார்கள். அது இவர்களுக்குப் புரியாவிட்டாலும் ஏதோ ஆபத்து என்று புரிந்தது. அதற்காக இவர்களை இழுத்தபோது போக மறுத்தார்கள். அவர்கள் கட்டாயப்படுத்தி வலுக்கட்டாயமாகக் கொண்டு போக முயன்ற போது கோபம் கொண்டார்கள்.

"செம்மொழி தெரியாதவர்களிடம் வந்து மாட்டிக் கொண்டோம். இவர்கள் நம்மைச் சித்திரவதை செய்யப் போகிறார்கள். இங்கிருந்து போய்விடுவோம்." எனறான் செம்பியன்.

பூங்குழலியும் அறிவழகனும் அதை ஆமோதித்தனர். மூவரும் திடீரென்று தங்கள் தலையிலிருந்த ஆன்டனாவினால் ஒலியெழுப்பினார்கள். காதைச் செவிடாக்கும் அந்த விபரீத ஒலியால் எல்லோரும் செயலிழந்து நின்றிருந்த வேளையில் மூவரும் தப்பி வெளியே ஓடிவந்தனர்.

ஆஸ்திரேலிய விஞ்ஞானிகளின் வாகன ஓட்டியாகப் பணிபுரிந்து கொண்டிருந்த தமிழனான சுந்தர் வெளியே காரில் அமர்ந்து தமிழ்நாட்டிலிருந்து வந்திருந்த தன் அம்மாவின் கடிதத்தைப் பிரித்து அம்மா தனக்காகப் பெண் பார்த்து வந்த விபரத்தைப் பதினெட்டாவது முறையாகப் படிக்க ஆரம்பித்தான்.

உள்ளிருந்து வந்த விபரீதமான சத்தம் கேட்டுப் பதறி எழுந்தான். அவன் கையிலிருந்த கடிதம் நழுவிப் பறந்தது. கடிதத்தைப் பிடிக்கப் பாய்ந்த சுந்தர் அலுவலகத்துக்குள்ளிருந்து வெளியே வந்த வினோத உருவங்களைப் பார்த்து திடுக்கிட்டு நின்றான்.

சுந்தரின் கையிலிருந்து நழுவிய கடிதம் உள்ளிருந்து ஓடிவந்து கொண்டிருந்த செம்பியன் முகத்தில் வந்து மோதியது. கடிதத்தைப் பார்த்து "ஆ...செம்மொழி.." என்றான் செம்பியன். சுந்தரோ "ஐயோ" என்றலறினான்.

விசில் ஒலியைத் தொடர்ந்து உள்ளிருந்து போலீஸ் விரட்டி வரத் துவங்க தாங்கள் அழைத்து வரப்பட்ட வாகனம் போன்றது அங்கே நிற்பது கண்டதும் சுந்தரை கூடவே இழுத்துப்போட்டு ஏறிக்கொண்டனர். காரை விரைந்து ஓட்டும்படி கட்டளையிட்டனர். பயமும் அவர்களின் தமிழால் குழப்பமும் அடைந்த சுந்தர் வேறுவழியின்றி காரைக் கிளப்பினான்.

அஞ்சியபடி "எங்கே போகணும்?" எனறு வினவினான்.

"திருவள்ளுவரைப் பார்க்கணும் அவர் வீட்டுக்குப் போ!".

* * *

*