*
ராசமணி (தொடர்கதை)
பாகம்:01 | 1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 | 8 | 9 | 10 | 11 | 12

Wednesday, September 27, 2006

நாகமாணிக்கம் - ராசமணி- 12

எல்லாம் யோசிச்சிப் பாத்தபோது பயங்கர குழப்பமும் கடைசியில ஏதோ ஒண்ணு தெளிஞ்சது போல இருந்தது. காலையில முதல் வேலையா மறைச்சு வெச்சிருந்த அபூர்வ நாகமாணிக்கத்தை எடுத்துக் கொண்டு போய் வீட்டுப் பின்பக்க விளையில் முளைச்சிருந்த பாம்புப் புத்தில் கொண்டு போய் போட்டேன்.

ஆச்சரியமாக சில நாளில் மனைவி குணமானாள். கூட்டுக்காற பனையேறிகள் பாண்டிக்கு பனையேறக் கூப்பிட்டார்கள். நானும் போனேன்.

வீட்டு நிலமை ஓரளவு சரியானது. இப்போ இளைய மகன் சவுதியில. மகளக் கட்டிக்கொடுத்தாச்சு. இப்போ சுக ஜீவிதம். சந்தோஷம்.

உள்ளூரில் பனையேற ஆளில்லாமல் பனையெல்லாம் வெட்டி வஸ்து உடையான்கள் தெங்கு நட்டினும். தெங்கெல்லாம் மாற்றி இப்பம் ரப்பர நடுனும். இப்பிடி காலம் மாறிப்போச்சு. நாமளும் மாறத்தானே வேணும்."

பழைய பனையேறி கதையை முடித்தார். அவர் சொல்வதில் உண்மை எத்தனை சதவீதம் என்று புரிந்து கொள்ள முடியாவிட்டாலும் ரசமான ஒரு கதை கேட்ட திருப்தி எல்லாருக்கும் இருந்தது.

"அந்தப் புத்து இப்பவும் இருக்கா அம்மாவா" கூட்டத்தில் ஒருவன் ஆவலோடு கேட்டான்.

"இருக்கப்பி, இப்பம் அதில நாகப்பிரதிம வச்சு கும்பிடுறம்." என்று கிழவர் பதில் சொன்னார்.

பனையேறியின் வீரதீர சாகசக் கதை கேட்ட இளவட்டங்களுக்கு இன்னும் ஏதோ உறுத்தல் இருந்தது.

திடீரென நினைவு வந்த இளைய பெருமாள் "அக்கரக் காரன அடிக்கியதுக்கு களரி படிச்சியளே. அடியேதும் நடத்தினியளா?" என்று கேட்டான்.

"இல்ல பிள்ள! ஆசானுக்க கட்டளை...ஒரு அடிக்கிம் போகப்பிடாதுன்னு. அது மட்டுமில்ல.. யார அடிக்க நான் அடிவேல படிச்சனோ அவருக்க ஒடம்பிறப்பு தான் எனக்க பெண்டாட்டியா வந்தது. பெறகு மச்சினன்கூட எதுக்கு மல்லுக்கு நிக்கிறது? தங்கமான மனுசன்...நல்ல மருவாதி...கல்யாணத்துக்கு பெறகு எங்கள தங்கமா தாங்கறார். எங்க கஷ்ட காலத்திலெல்லாம் அவரு தான் உபகாரம் செய்தது."

"அவரு பாக்க வந்த இக்கரப் பொண்ணு.?"

"அந்தப் பெண்ணத்தான் அவரு கட்டினாரு. கல்யாணம் ஒரு பெரிய கொளப்பத்தோட தான் நடந்துது. அதும் ரசமான கத தான்."

"அதையும் சொல்லும்."

"பொறவு பாப்பம். இப்பம் நேரம் இருட்டிச்சி. நான் போறன்."

செல்வராசு மாலைப் பேப்பருடன் வந்தான். குளக்கரையில செத்துக் கிடந்தவனுக்க படத்தோட செய்தி வந்திருந்தது.

"பட்டணத்துல இருந்து மாடு வாங்க பணத்தோட வந்தவனை கூட வந்தவன் ஒருத்தன் குடிக்க வச்சு அடிச்சுப்போட்டு பணத்தோட ஓடிட்டானாம்."

லெச்சி அடிச்ச கதை இப்பிடி ஆண்டி கிளைமாக்சா ஆனதை களித்துச் சிரித்து இளைஞர் கூட்டம் கலைந்தது.

***

சில நாட்கள் கழித்து கிழவர் வீட்டுக் கொல்லைப்புறம் இருந்த நாகப்புற்று அடித்து உடைக்கப் பட்டுக் கிடந்தது. அருகில் ஒரு நாகப்பாம்பு செத்துக் கிடந்தது.

(நிறைவு!)

Thursday, September 21, 2006

நாகதோஷம் - ராசமணி- 11

அங்கே டாக்டர் தனியாக கேட்ட போது உண்மையை மறைக்காமல் சொன்னேன். ஆனா அந்த கிறுக்குப் புடிச்ச டாக்டர் என் சொந்தக்காரங்க கிட்ட எனக்கு பைத்தியம் முற்றி விட்டதாகச் சொல்லி ஆஸ்பத்திரியிலேயே வைத்துக்கொண்டார். பிறகு வேண்டிய மட்டும் பீஸ் கறந்து சில நாள் கழித்து பைத்தியம் தெளிந்ததாக வீட்டுக்கு அனுப்பினார்.

பிறகு ஒருநாள் பரிசோதிக்க வாறமாதிரி வீட்டுக்கு வந்து நாகமணியை விலைக்குக் கேட்டார். போடா என்று விரட்டி விட்டேன்.

நாகமணியை விக்க எனக்கு மனசு வரவில்லை. வழியும் தெரியவில்லை. அதை வைத்திருந்த இடத்தில் அடிக்கடி சோதித்தேன். பத்திரமாக இருந்தது.

ஒரு நாள் எனக்க மூத்த மகன் பாம்பு கடிச்சி செத்துப் போனான். அப்போது ஒரு பயம் வந்தது. பிறகு பெண்டாட்டிக்கு விஷக்கடி மாதிரி வந்து மேலேல்லாம் வீங்கியது. மருந்து கொடுத்தும் குணமாகவில்லை. அவள் கழுத்தில் சக்கரவர்த்தியின் படத்தில் இருந்தது போன்ற வளையம் இருந்தது. இது நாகதோஷம் என்று பலரும் சொன்னார்கள். நாகராஜனின் கோபம் தான் என்று எனக்குள் தோன்றியது. நாகர்கோவிலுக்குப் போய் நாகராஜா கோவிலில் நேர்ச்சை செய்துவிட்டு வந்தேன்.

அதே சமயம் வீட்டுக்குப் பின்பக்க விளையில ஒரு பாம்புப் புற்று உருவாச்சு. புற்றை அழிக்க நினைத்து பின் வேண்டாமென்று விட்டு விட்டேன்.

ஒரு நாள் ராவு உறங்க கிடந்த போது ஏதோ தோன்றியது. நாகரத்தினம் கைக்கு வந்த பிறகு நான் வேலைக்குப் போகவில்லை. வீட்டில் கஷ்டமும் தாரித்திரியமும். பயங்கர வறுமை. மூத்த மகன் இறந்து விட்டான். மனைவி நோயாளியானாள். நானும் பைத்தியம் என்று பேரெடுத்தேன். இன்னும் என்னென்னவோ பிரச்சினைகள். வாழ்க்கைல நிம்மதி என்பதே இல்லாம போச்சு.

(கதை வளரும்...)

நாகமணி கிடைத்தது - ராசமணி- 10

அவசரமாகப் பாய்ந்து டார்ச்சை எடுத்து அடித்தேன். சக்கரவர்த்தி படமெடுத்து சீறிக்கொண்டிருந்தது. படம் என்றால் அத்தனை பெரிய படம். நானும் எத்தனையோ பாம்புகளைப் பார்த்திருக்கிறேன். ஆனால் இதைப்போல....இல்லை.

காலநீட்டத்தில் சுருங்கிப்போன உடம்பாதலால் நீளம் அதிகமில்லை. ஆனால் அதன் படமோ விரிந்த பனை மரத்தை விடப் பெரிதாக இருந்தது.

கண்கள் தெரியாததால் அது எனக்கு நேராகச் சீறவில்லை. ஆனால் அது சீறிய ஒவ்வொரு தடவையும் அதன் வாயிலிருந்து ஆலகால விஷம் காற்றில் பறந்து சென்றது. அப்போதெல்லாம் மூச்சை அடக்கிக்கொண்டேன். முகத்தையும் திருப்பி நின்றேன்.

சுற்றிலும் திரும்பிச் சீறிய சக்கரவர்த்தி பனையை நோக்கி பயங்கர சீற்றத்தோடு மூன்று தடவை கொத்தியது.

அதன் பற்களும் தலையும் பயங்கரமாகச் சிதைந்தன. ஆனாலும் சீற்றம் தீரவில்லை. சீறவும் முடியவில்லை. பனையை இறுக்கிச் சுற்றிக்கொண்டு வேரோடு வேராகச் சாய்ந்தது.

இந்தப் பயங்கரமான காட்சியை பயத்தோடு பார்த்திருந்த நான் மெதுவாக சுய நினைவுக்கு வந்தேன்.
***
கிழவரின் வாக்குமூலம் மறுபடி இங்கே சற்று நின்றது. காரணம் பாம்பின் சீறலின் உச்சக்கட்ட விவரிப்பின்போது அங்கிருந்த பலரும் தங்கள் கால்களின் கீழும் சுற்றுமுற்றும் மரத்தடிகளையும் எச்சரிக்கையோடு பார்த்துக்கொண்டனர். அது அவருக்கு தன் கதையின் நம்பகத் தன்மையை உணர்த்துவதாகத் தோன்றியது.

யாரும் எதுவும் பேசவில்லை. பனையேறி தானாகத் தொடர்ந்தார்.

"மெதுவாக எழுந்துபோய் சாணகம் சிதறியிருந்த இடத்தைப் பார்த்தேன். இப்போதும் பழைய நிதியின் நினைவு வந்தது. இதற்கும் ரத்தபலி வேண்டுமாவென தெரியாது. ஆனாலும் பாளை அரிவாத்தியை எடுத்து கையைக் கீறி சாணகத்தின் மேல் ரத்தத்தை தெளித்தேன். கவனமாக சாணகத்தை எடுத்து உருட்டிக்கொண்டு ஒரு பனையோலையில் பொதிந்தேன். நாகமணி இப்போதைக்கு வெளியே தெரிந்து விடக்கூடாது. சக்கரவர்த்தி மீண்டும் எழுந்து விடவும் கூடும்."

"அப்ப நாகமணி உமக்கு கெடச்சாச்சா? அத என்ன செஞ்சீரு?"

இளைஞர்கள் ஆவலோடு கேட்டகேள்விக்கு பனையேறியிடமிருந்து கொஞ்ச நேரம் பதிலே வரவில்லை. ஏதோ யோசனையில் இருந்த பனையேறி மெதுவாக

"ஆங்.. வீட்டுக்கு எடுத்துக் கொண்டு போன பிறகு ஒரு சட்டியில வெள்ளம் எடுத்து அதில சாணக உருண்டைய போட்டேன். சாணகம் வெள்ளத்தில் கரைஞ்ச போது அதனுள்ளேயிருந்து வெள்ளத்தில் ஒரு வெளிச்சம். மங்கிய சிவப்பு வெளிச்சம். சாணகத்தின் கறுப்பை மீறிய ஒரு ஒளி.

அதை வெளியில் எடுத்து கழுவி பார்த்த போது கண் கூசியது. அத்தனை பிரகாசம். அதை ஒரு கறுத்த துணியில் கட்டி வைத்துக்கொண்டேன்.

நாகரத்தினம் கிட்டி விட்டது. இனி அதை என்ன செய்வதென்று தெரியவில்லை. யாருக்கும் காட்டாமல் அதை ஓரிடத்தில் புதைத்து வைத்தேன்.

கொஞ்ச நாளாகவே நான் இரவில் வெளியே போவதும் பித்துப் பிடித்தமாதிரித் திரிவதும் பெண்டாட்டிக்கு ஏதோ சந்தேகம். அவள் கேட்டும் நான் ஏதும் சொல்லவில்லை.

நாகமாணிக்கத்தை என்ன செய்வது என்ற ஆலோசனையிலேயே கொஞ்ச நாள் போனது. அது கிட்டின பிறகு நான் பனையேறப் போகவில்லை. பலரும் வந்து கூப்பிட்டும் நான் போகவில்லை.

சக்கரவர்த்தி நாகத்தைப் பற்றி யாராவது பேசுகிறார்களா? என்று பார்த்தேன். யாருமே பேசவில்லை. அப்படி ஒரு அபூர்வ நாகம் செத்துக்கிடப்பதை யாரும் பார்க்கவில்லையா என்று ஆச்சரியமாக இருந்தது. அது பிறகு பயமாக மாறியது. அது பிழைச்சு எழுந்திருந்தால்... பாம்புகள் தேடிவந்து பழிவாங்கும் என்று சொல்லக் கேட்டிருக்கேன்.

பிறகு மெல்ல தைரியம் வந்து அந்த இடத்துக்கு போய் பார்த்தேன். நாகம் கிடந்த சுவடே தெரியவில்லை. யாரும் கண்டு எடுத்து வெட்டிப் பூத்தி இருப்பார்களோ என்னவோ தெரியாது.

நாகமணியை விற்பதா வேண்டாமா? எங்கே விறபது? எப்படி விற்பது என்றெல்லாம் யோசித்து தலை புண்ணானது. அதிலேயே கிறுக்குப் பிடிச்சது போல அலைஞ்சதில் பெண்டாட்டியும் அவள் அண்ணனுமாக என்னை பைத்தியக்கார ஆஸ்பத்திரிக்கு கொண்டு போனார்கள்.

(கதை வளரும்...)

Wednesday, September 20, 2006

நாகமணி மறைந்தது - ராசமணி-9

ராசநாகம் நாகமணி கக்குற இடத்த கவனமா பார்த்து வச்சிருந்தேன். அந்த இடத்துக்கு பக்கமா இருந்தது ஒரு வடலிப்பனை மட்டும் தான். அதனால் அது ஆபத்துன்னு கொஞ்சம் நீங்கி இருந்த உயரமான பனையை தேர்ந்தெடுத்தேன்.

கையில் டார்ச் லைற்றும் ஒரு கலயம் மாட்டுச் சாணகமும் எடுத்துக்கொண்டு முந்தின ராத்திரி இருட்டின பிறகு பனையில் ஏறி வசதியா உக்கார்ந்தேன். கவனமாகப் பார்த்துக்கொண்டு காத்திருந்தேன்.

நடுராத்திரியானதும் நானிருந்த பனைமரத்துக்கு நேர்கீழே ஏழெட்டு அடி தூரத்தில திடீர்னு நாகமணி ஒளிவிட்டது. கொஞ்சநேரம் நாகம் அகல காத்துகிட்டிருந்தேன். கொஞ்சம் பொறுத்து கலயத்திலிருந்து சாணகத்தை எடுத்து உருட்டி நாகமணியை குறி வெச்சு எறிஞ்சேன்.

சட்.

வடலிப்பனையின் ஓலையில் பட்டு சாணகம் சிதறியது. ஏதோ சப்தமும், அசைவும் உணர்ந்த நாகம் விரைந்தோடி வந்து நாகமணியைக் கவ்விக் கொண்டோடியது."

கிழவர் சஸ்பென்சில் நிறுத்தினார். அடுத்து ஒருபெருமூச்சோடு தொடர்ந்தார்.
***
ஏமாந்து விட்டேன்.

மறுமாசம் அந்த இடத்துக்கு நாகம் வரவில்லை. ஆனாலும் புற்றைவிட்டு அதிக தூரம் போக வாய்ப்பில்லை. புற்று எங்கோ பக்கத்தில தான் இருக்கும். அதனால விடாமுயற்சியோட மாசக்கணக்கா காத்துப் பாத்தேன்.

ஏழு மாசம் கழிச்சு விளையின் மறு கோடி மூலையில அதக் கண்டேன். மறுநாள் போய் பார்த்தப்ப வசதியா ஒரு பனை அங்க நின்னுது. அடுத்த அமாவாசைக்கு ரொம்ப கவனமா பனையில் ஏறி உக்காந்து இராத்திரியைக் கழித்தேன்.

சரியா நடுநிசிக்கு நாகமணி தோன்றியது. நேர் மேலேயிருந்து பார்த்துக் கொண்டிருந்த எனக்கே கண்கள் கூசியது. அந்தப் பிரதேசத்தையே தன் செவ்வொளியால் சிவக்கடித்து பளபளவென்று ஒளிவீசியது நாகமணி. கவனமாக சில நிமிசம் பொறுத்து சாணக உருண்டையை ஒளிவீசிக் கொண்டிருந்த நாகமணியின் மேல் எறிந்தேன். உருண்டை குறி பிசகாமல் நாகமணியின் மேல் விழுந்து அதை மூடிக்கொண்டது. நொடிக்குள் அந்தகாரம் சூழ்ந்தது.

அக்கணமே பாம்பும் அந்தகனானது. சக்கரவர்த்தி வேகமாக ஓடியது. அதன் சரசரவென்ற ஓசை என் காதுகளில் நாராசமாய் ஒலித்தது. அந்த இடத்தை சுற்றிச் சுற்றி வருவது போல இருந்தது. திடீரென்று ஒலி நின்றது. அந்த இடம் பூரண அமைதியில் ஆழ்ந்தது.

காற்றும் கூட தன் மூச்சை நிறுத்தியது மாதிரியான நிசப்தம். அந்தகார இருள். நடுங்கும் இதயத்துடன் அதேசமயம் ஒரு சந்தோஷ எதிர்பார்ப்புடன் மரத்தின் மேலேயே இரவைக் கழித்தேன்.

பொழுது புலருமுன் பறவைகளின் ஒலி மெல்லக் கிளம்பியது. இது தான் சமயம். இனி சந்தைக்குப் போகிறவர்கள் நடமாட்டம் ஆரம்பித்துவிடும்...

மெல்லக் கீழிறங்கினேன். கடைசி அடி எடுத்து வைக்குமுன் ஏதோ ஒரு உந்துணர்வில் கொஞ்சம் மேலேறி டார்ச் லைற்றை அடித்தேன். சரியாக நானிருந்த பனைமரத்தைச் சுற்றிக்கொண்டு சக்கரவர்த்தி படுத்திருந்தது. எந்த அசைவும் இல்லை. செத்தது போலத்தான் கிடந்தது. உயிர் இருக்கிறதா என்று தெரியவில்லையே.

இன்னும் சற்று மேலேறி எம்பி பதினைந்து அடிதூரம் தாண்டிக் குதித்து எழுந்தேன்.

டார்ச் லைட் சிதறி விழுந்தது. குனிந்து அதை எடுப்பதற்குள் உஸ்ஸென்ற சீறல் ஒலி.

(கதை வளரும்...)

Tuesday, September 19, 2006

ராஜநாகம் வந்தது - ராசமணி-8

அப்பன் காலத்துக்குப் பிறகு எனக்கும் பனையேத்து தொழிலாச்சு. கல்யாணம் பண்ணி ரெண்டு பிள்ள பெத்த பிறகும் எனக்குள்ள ஒரு ஏக்கம் இருந்தது. அண்ணு கிட்டின நிதி இருந்திருந்தா இப்பிடி நிதம் பனையேறி கஷ்டப் படணுமான்னு அப்பப்ப நெனச்சுக்குவேன்.

இப்படி காலம் போய்க்கிட்டு இருக்கைல எப்போதும் போல ஒரு நாள் விடியக்காலத்த எழுச்சி பனையேறப் போனேன். பனைக்க மேலயிருந்து பார்க்க செவப்பா தரையில ஏதோ மினுங்கிச்சு. நல்லா உத்துப் பார்த்தேன். சின்ன சிவப்பு பல்பு எரிஞ்சது போல வெளிச்சம். அது என்னன்னு பார்க்க வேகமா கீழ இறங்கி வந்தேன். வந்து பாத்தா ஒண்ணையும் காணல்ல. நல்லாத் தேடிப் பாத்துட்டு மறுபடி பனைக்க மேல ஏறிப் பார்த்தேன். அப்பவும் ஒண்ணும் காண முடியல.

ஏதோ ஒரு சந்தேகத்துல மறுநாளும் நேரமே எழுந்து போனேன். அண்ணும் ஒண்ணும் காணல. பிறகு தினமும் பனைல ஏறி நல்லா தேடுவேன். சரியா இருபத்தொம்பது நாள் கழிச்சி மறுபடி அதப் பார்த்தேன். மேலயிருந்து அதப் பார்த்தவுடனே அது என்ன்னு எனக்கு மனசிலாகிப் போச்சு. அண்ணைக்கு கறுத்த வாவு. போனமாசம் கறுத்த வாவு அண்ணைக்கு தான் முதல்ல அதைப் பார்த்தது. பிறகு மறுபடி அடுத்த அமாவாசைக்குத்தான் பாக்குறன். அப்படிண்ணா அது அதுதான்..."

பனையேறி கதையை நிறுத்தி விட்டு எழுந்து சிறுநீர் கழிக்க போனார். அவர் வரும் வரை இளவட்டங்களுக்கு இருப்புக் கொள்ளவில்லை. அவர்களும் பின்னோடு போயினர். 'அது' என்ன வென்று அறியும் ஆவலில்.

'வேலை' முடிந்ததும் பனையேறி கதையைத் தொடர்ந்தார். "நான் களரி படிக்கப்போன காலத்துல கோபாலன் ஆசான் ஒருமுறை ராசசர்ப்பத்துக்க கதைய சொன்னார். ஆயிரம் வெளுத்த வாவுக்காலம் மனுச கண்ணுல படாத வளர்ந்த நாகப்பாப்பு சக்கரவர்த்தி சர்ப்பமா மாறும். அதாவது கிட்டத்தட்ட நூறு வருசம். அப்ப அது நிலாவுக்க சக்திய கிரகிச்சு மணியாக்கி எடுக்கும். அது சிப்பிக்குள்ள முத்துப்போல ராசசர்ப்பத்துக்க தொண்டைக்குழியில வளரும். பின்னையும் தொண்ணூற்றொன்பது பௌர்ணமி கழித்து பூரண நாகமணி விளையும். அத முத முதலா ஒரு நெறஞ்ச அமாவாசை அண்ணைக்கு கக்கும். அதப் பார்த்த வெளிச்சத்துல அதுக்க கண்ணு அவிஞ்சு போகும். ஆனாலும் ஒரு புதிய சக்தி அதுக்க ஒடம்புல ஏறும்.

அதுக்கு பிறகு சாதாரண வெளிச்சத்துல அதுக்கு கண்ணு தெரியாது. குருடா இருக்கும். ஆனா நாகமணிக்க வெளிச்சத்துல அதுக்கு கண்ணு காணும்.

அது இரை தேடி பகல் வெளிச்சத்துல வரமுடியாது. ஒவ்வொரு அமாவாசைக்கும் அது வெளிய வந்து நாகமணிய கக்கி ஒரிடத்தில் வச்சுட்டு அந்த வெளிச்சத்துல இதை தேடும். இரை கிடைத்த பிறகு நாகமணிய எடுத்து விழுங்கிட்டு புத்துக்குள்ள போயிடும். அடுத்த அமாவாசை வரை அது மறுபடி வெளியே வராது.

நாகமணி இல்லேண்ணா அதால இரை தேட முடியாது. ஆனால் அந்த நாகத்து கிட்ட யாரும் போக முடியாது. அது சீறி மூச்சு விட்டாலே அந்த மூச்சுக்காத்துல வாற விஷம் போதும் மனுசன சவமாக்கறதுக்கு.

இவ்வளவு விவரங்களும் ஆசான் சொல்லி நான் அறிஞ்சது. அதனால் இது நாகமணி தான்னு உறுதியா தெரிஞ்சது. இனி என்ன செய்யலாம்னு யோசிச்சு பாத்தேன்.

ஒரு முடிவோட ஒருமாசம் காத்திருந்தேன். அடுத்த அமாவாசையும் வந்தது.

(கதை வளரும்...)

Monday, September 18, 2006

புதையல் கிடைத்தது - ராசமணி-7

"அப்ப எனக்கு பத்து வயசிருக்கும். அம்மா ஒரு நாள் காலயில எழுப்பி 'விளையில போய் ரெண்டு மூடு மரச்சீனிக் கிழங்கு பிடிங்கிட்டு வாலே' ன்னு சொன்னா. நானும் போனேன். நல்ல மரச்சீனி மூடு தேடி விளைக்குள்ள நடந்தேன். அப்போ கீழ எதோ மினுங்கிச்சு... என்னான்னு பாக்க கையில எடுத்தேன். தகதகன்னு தங்கக் கட்டி போல மினுங்கிச்சு. எடுத்து நிக்கர் பாக்கெட்டுல இட்டுட்டு மரச்சீனி பிடுங்கினேன். 'லே அது என்னலே பாக்கெட்டுல இட்டது' ன்னு ஒரு கொரலு கேட்டுது. ஆருன்னு பாத்தா அது கோரோலு அம்மாச்சன்.

அவரு வெளையில வெளிக்கி போக வந்தவரு நான் எதையோ எடுத்து பாக்கெட்டுல இட்டத கண்டிட்டாரு.

அவரு கேட்டதும் அதை எடுத்து அவரிட்ட காட்டினேன். அவர் அதைக் கையில வாங்கினதும் அதுக்க பளபளப்பெல்லாம் மாறி கல்லாப்போச்சு. அம்மாச்சன் அதப்பாத்துட்டு 'கைல கிட்டின யோகத்தெ மூளியாக்கிப் போட்டனே' ன்னு புலம்ப ஆரம்பிச்சார்.

கால்கழுவி என்கூட வீட்டுக்கு வந்தவரு 'ஐயோ அக்கா, உனக்க மோனுக்க யோகத்தெ நான் பறிச்சிட்டனே' ன்னு சொன்னார்.

அம்மைக்கு ஒண்ணும் மனசிலாகவில்ல. என்னன்னு கேட்டாவ.

'ஒனக்க மவனுக்கு நிதி கெடச்சுதக்கா. அது என்னன்னு அறியாத கையில வாங்கினதால கல்லாப் போச்சுதக்கா...அசுத்தமா இருந்து நெதியத் தொட்டதால அது மாஞ்சு போச்சு. நெதி தான்னு தெரிஞ்சிருந்தா ரெத்தபலி கொடுத்து எடுத்திருப்பனே' என்று புலம்பினார்.

அப்படி எனக்குக் கிட்டின நிதி மாஞ்சு கல்லாப் போச்சு. வளந்த பெறகு தான் அதுக்க காரணத்தை அறிஞ்சேன். நிதி கிட்டயோகம் உள்ள ஆளுவ கண்ணுல தான் அது படும். கிட்டினதும் ஒரு விரலையாவது கீறி அதுமேல ரெண்டு சொட்டு ரத்தம் விட்டு ரத்தபலி கொடுத்த பிறகுதான் கைல எடுக்கணும்னு தெரிஞ்சுகிட்டேன். இல்லேங்கி நிதி காத்த பூதம் அதை கல்லா மாத்திடும்."

பனையேறியின் நிதி கிட்டின கதை கேட்ட இளைஞர்கள் கைகொட்டிச் சிரித்தார்கள்.

"சிரிக்காதீங்கலே. அண்ணு நிதி மாஞ்சு போனாலும் நாப்பது வயசுல மறுபடி நிதி எடுத்தேன்ல" என்று பனையேறி மார்தட்டினார்.

சிரித்துக் கொண்டிருந்தவர்கள் சீரியசானார்கள். "பின்னியும் நிதி கிட்டிச்சா? எப்ப... எப்பிடி...?"

பனையேறி அடுத்த கதைக்குத் தயாரானார்.

(கதை வளரும்...)

மோகினி வதம் - ராசமணி-6

நடிநிசிப் பூசை முடிந்து திரும்பிய கோபாலன் ஆசானுக்கு வழியியிலேயே கெவுளி கேட்டது. துர்ச்சகுனம் கண்டதும் அவருக்கு வியர்த்து விட்டது.

ஏதோ அனர்த்தம் என்று அவருக்கு புரிந்தது. விரைவாக நடந்து வீடுவந்து சேர்ந்தார்.

வீடு திறந்து கிடந்தது. சுபத்ராவை அழைத்தார். பதில் வரவில்லை. எந்த அரவமும் இல்லை. ஆசான் நடுக்கத்துடன் விளக்கை ஏற்றினார். வீட்டுச் சாமான்கள் எல்லாம் தாறுமாறாக கலைந்து கிடந்தது. வீடு முழுவதும் தேடிக்கொண்டு பின்வாசலுக்குப் போனவர் அங்கே பின் வாசல் நிலைப்படியில் சுபத்ரா தலைகீழாக விழுந்து கிடப்பதைப் பார்த்தார். ஓடிச்சென்று தூக்கியெடுக்க முனைந்தவர் தடுமாறி நெஞ்சு வெடிக்க நின்றார். அவ்வளவு கோரமாக இருந்தது அந்தக் காட்சி. வயிறு கிழிக்கப்பட்டு உள்ளுறுப்புகள் வெளியே தொங்கும் நிலையில் சுபத்ரா மரணித்திருந்தாள்.

இத்தனைக்கும் அங்கே ஒரு சொட்டு ரத்தம் கூட சிந்தவில்லை. என்ன நடந்திருக்கு மென்று ஆசானுக்கு தெளிவாகப் புரிந்தது.
***
கிழவர் கதையை சற்று நிறுத்திய போது இளைஞர்களுக்கு ஆர்வம் கொப்பளித்துக் கொண்டிருந்தது. "பிறகு என்னாச்சு அம்மாவா?" என்று கோரசாகக் கேட்டனர்.

கிழவர் தொடர்ந்து சொன்னதாவது "சுபத்ர ஆணியப் பிடிங்கி எடுத்ததுமே லெச்சி மறுபடி விடுதலையாயிட்டா. கோரப்பல்லும் நீட்ட நாக்குமா அவ எழுந்திரிச்சத பார்த்து சுபத்ர பேடிச்சு கிடுங்கி போயிட்டா. லெச்சி அவளைப் பிடிச்சி வச்சு கழுத்தை கடிச்சு ரெத்தத்தை உறிஞ்சி குடிச்சா. ரெத்தம் முழுதும் குடிச்சு முடிஞ்சதும் தன் கையாலேயே சுபத்ரக்க வயத்தை கிழிச்சு குடலை எடுத்து மாலையா போட்டுக்கிட்டா.

நெறமாச கர்ப்பிணியா இருந்த சுபத்ரக்க கர்ப்ப பாத்திரத்த பிச்சி கொழந்தய எடுத்துகிட்டு எழுந்திரிச்சு ஆவேசமா நடந்து போனா.

ஆசானுக்கு இது மனசிலானவுடனே ஒரு காரியம் ஓர்மைக்கு வந்துது. கர்ப்பிணிக்க ரத்தம் குடிச்சு லெச்சி இருமடங்கு பலசாலியாயிட்டா. இப்போ தலைப்பிள்ளை சிசுவை கொண்டு போயிட்டா. சுடுகாட்டு சாம்பலோட தலைப்புள்ள மூளையை பிசைஞ்சு சாப்பிட்டா அவ பத்து மடங்கு பலசாலியா மாறிடுவா. அதுக்கப்புறம் அவளை யாராலயும் அழிக்க முடியாது. ஆசானுக்கு நடுக்கம் வந்தது.

உடனே சுபத்ரய மறந்துட்டு வசிய மைகளையும் தன்னோட மந்திர சாமக்கிரங்களையும் எடுத்துட்டு ஓட்டமாக சுடுகாட்ட நோக்கி நடந்தாரு.

அங்கே லெச்சி அந்தப் பிள்ளைய தரையில் கெடத்தீட்டு தரையில ஒரு வட்டம் போட்டு உக்காந்தா. அவ கை முழுக்க ரத்தம் உறைஞ்சு கிடந்தது. தல முடிய விரிச்சு போட்டு ஒரு ஆட்டம் ஆடினா. அங்கேயிருந்த சுடுகாட்டு சாம்பல எடுத்து ஒரு கரியிலை மேல போட்டுட்டு கீழே கிடந்த சிசுவை கையில எடுத்தா.

அதே நேரம் ஆசானும் சுடுகாட்டு வாசலுக்குள்ள நுழைஞ்சிட்டார். லெச்சியும் ஆசானைப் பாத்துட்டா...தலைப்பிள்ளை மூளையை தின்னுமின்னே அவரு கிட்ட சிக்கக் கூடாதுன்னு லெச்சி எழுந்து ஓடினா. ஆசானும் விரட்டினார்.

ஒரு புளிய மரத்தடி வந்ததும் லெச்சி நின்னு திரும்பினா. பயங்கர கோரப்பல்லும், விரிஞ்ச தலைமுடியும், நீட்டின நாக்குமா அவ பார்த்த உக்கிரப் பார்வையில ஆசானும் ஒரு நொடி ஆடித்தாம் போயிட்டாரு. ஆனாலும் சுதாரிச்சிகிட்டு வசிய மையை எடுத்து வீசினார். அது அவளுக்கு தூசி விழுந்த பாவம்தான். லெச்சி உக்கிரமா மொறச்சு கிட்டே ஆசானப் பார்த்து முன்னேறினா.

ஆசானுக்கு நெஞ்சு படபடத்தது. விட்டா அவ தன்னையும் கொல்லாம விடமாட்டான்னு மனசிலாயிட்டது அவருக்கு. அற்ற கைக்கு கடைசிப் பிரயோகமா தகப்பன் சொல்லிக் கொடுத்த வித்தை நினைவுக்கு வந்தது.

மூணுவித வசிய மையை கையிலெடுத்து பிசைஞ்சு மந்திர உச்சாடனம் செய்து அவ மேல எறிஞ்சாரு. அது சரியா லெச்சிக்க நெற்றிப்பொட்டுல போய் தாக்கிச்சு. லெச்சி சரிஞ்சு விழுந்தா. ஆசான் சாக்கிரதையா கிட்ட போய் அவள் தலைமுடியைப் பிடிச்சு கட்டுனாரு. மந்திர முடிச்சு போட்டு புளிய மரத்தோட சேர்த்து அறைஞ்சார்.

அறைஞ்சு முடிந்ததும் லெச்சியின் உடம்பு மறைஞ்சுது. முடிஞ்சு வெச்ச தலைமுடி மட்டும் அவளை அறைந்த ஆணியில கட்டுப்பட்டு கிடந்தது.

ஆசானுக்கு அப்பத்தான் நிம்மதி வந்தது. ஆனா அடுத்த நிமிசமே மனசில துக்கம் வந்து சுமையா ஏறினது. கீழ கிடந்த தன் ரத்தமான சிசுவின் பிரேதத்த எடுத்திட்டு வீட்டுக்குப் போனாரு. தாய்க்கும் பிள்ளைக்கும் கடசிச் சடங்கு செஞ்சாரு.

எல்லாம் முடிஞ்சது... வாழ்க்கை வெறுத்துப் போச்சு. நேராத் தகப்பனாரத் தேடிப் போனாரு. எல்லாம் சொல்லி அழுதார். பூபாலன் ஆசானும் மகனுக்கு கஷ்டங்கள கேட்டதும் மனது எளகிட்டாரு. மகனை ஆறுதல் படுத்தி தேத்தினார். பெறகு மகனுக்கு விட்டுக்கொடுத்து அவரு ஒதுங்கீட்டாரு. ஆசானும் சுபத்ரக்க நெனப்பிலயே மறு கல்யாணம் கட்டாம தகப்பனாரோட இருந்திட்டாரு. மந்திரவாதமும் கொஞ்சங் கொஞ்சமா நிறுத்தி களரி மட்டும் வெச்சு நடத்தி வந்தாரு.

இத்தறயுந்தான் ஆசானுக்க கதை" என்றார் கிழவர்.

செல்வராசும் இளையபெருமாளும் கூட்டரும் "கத கம்பீரம்" என்றவாறு கலைந்து போயினர்.

இதுலயிருந்து பனையேறி செல்லப்பனும் இளவட்டக் கூட்டங்களும் சினேகிதராயினர். அந்தி வேளையில் பனையேறியின் பழைய கதை கேட்க கலுங்குப்பக்கம் கூட ஆரம்பித்தனர்.

"எனக்கு நெதி* கிட்டின கதை தெரியுமா" என்றவாறு ஒரு புதிய கதையை பனையேறி ஒருநாள் எடுத்து விட்டார்.

(கதை வளரும்...)

Sunday, September 17, 2006

மோகினியின் தந்திரம் - ராசமணி-5

தனக்கு ஒரு துணை கிடைத்ததில் சுபத்ராவுக்கு சந்தோஷம். வந்தவள் அழகாகக் கூட்டி மெழுகினாள். சுவையாகச் சமைத்தாள். துணிமணிகளைத் துவைத்தாள். சுபத்ராவுக்கு நல்ல பேச்சுத் துணையாகவும், தோழியாகவும் இருந்தாள். ஆசான் வீட்டில் இல்லாதபோது அவர்கள் சந்தோஷமாகப் பேசிக்களித்து பொழுதைப் போக்கினர்.

அவள் வந்து மூன்று மாதங்கள் கடந்தன.

அன்று அமாவாசை. பக்கத்து கிராமத்தில் ஒரு பூசைக்கு போக வேண்டியிருந்தது. பகல் உணவு உண்டதும் ஆசான் சுபத்ராவிடம் சொல்லிக் கொண்டு கிளம்பினார்.

அவர் கிளம்பிப்போனதும் சுபத்ரா அந்தப் பெண்ணிடம் தனக்குப் பேன் பார்த்துத் தரும்படி கேட்டாள். நிலைப்படியில் அமர்ந்தபடி அந்தப் பெண்ணும் சுபத்ராவுக்கு பேன் பார்த்துக் கொடுத்தாள். கொஞ்ச நேரம் கழிந்ததும் அவள் சுபத்ராவிடம் தனக்கும் தலையில் நிறைய பேன் என்று சொன்னாள். சுபத்ரா உடனே அவளைக் கீழே இருத்தி, தான் மேல் படியில் இருந்து கொண்டு பேன் பார்க்கத் தொடங்கினாள்.

சுபத்ரா அந்தப் பெண்ணை வேலைக்காரியாக நினைக்கவில்லை. அக்கம் பக்கத்தவருடன் பழகமுடியாத தனிமையில் தனக்கொரு உற்ற துணையாக வந்த அவளை அன்பிற்குரிய தோழியாகவே எண்ணினாள்.

சுபத்ராவின் கை அந்தப்பெண்ணின் தலைமுடியை அளைந்து பேன் தேடியபோது உச்சந்தலையில் ஏதோ அவள் விரல்களுக்குத் தட்டுப்பட்டது.

சுபத்ரா அதைத் தொட்டுத் தடவிப் பார்த்தாள். என்னவென்று உணர முடியவில்லை. அதனால் அவளிடமே விசாரித்தாள். சமயம் பார்த்திருந்த லெச்சியும் அதை எடுத்து விடும்படி கேட்டுக்கொண்டாள். சுபத்ரா என்னவென்று அறியாமல் தன் கணவன் மந்திரக் கட்டிட்டு அறைந்து வைத்த ஆணியை லெச்சியின் தலையிலிருந்து பிடுங்கி எடுத்தாள்.

(கதை வளரும்)

மோகினி வந்தாள் - ராசமணி - 4

பூவறத்து பூபாலன் ஆசானுக்க மகன்தான் எனக்க ஆசான் கோபாலன் ஆசான். தகப்பன் கிட்டயே சிஷ்யனா இருந்து எல்லா அடிவேலயும் மந்திரவாதவும் படிச்சாரு. பேருகேட்ட மந்திரவாதியா இருந்த தகப்பன் மகனுக்க தெறமைய பார்த்து சந்தோசப்ப்டாரு. மகனுக்கு கேரளத்துல பெண்ணு பாத்து கெட்டி வச்சாரு.

அந்தப் பெண்ணு சுபத்திரயும் நல்லபடி குடும்பத்தை நடத்தி கணவனையும் மாமனாரையும் நல்லா பாத்துக்கிட்டா."

பனையேறி கதையைக் கொஞ்சம் நிறுத்தி ஒரு முறுக்கானை எடுத்து வாயில் இட்டுக்கொண்டார். அதன்பிறகு அவர் சொன்ன கதை இதுதான்.

அடிப்படையில தகப்பனுக்கும் மகனுக்கும் பெரிய வித்தியாசம் இருந்தது. பூபாலன் ஆசான் யாருக்கும் ஏவல் செய்வினை செய்யணும்னாலும் செய்து வைப்பார். ஆனா மகனோ யாருக்கும் கெடுதியாக செய்வினை செய்ய மறுத்து விட்டார். அவர் செய்வினை ஏவல் எடுப்பார். ஏற்கனவே பீடிக்கப் பட்டுள்ளவர்களை அதிலிருந்து விடுவிப்பதுதான் அது.

இப்படியான வேளையில் ஒரு தடவை தகப்பன் வைத்த ஏவலையே மகன் முறிக்க வேண்டி வந்தது. அன்றிலிருந்து தகப்பனும் மகனும் பகையாளியானார்கள். கோபாலன் ஆசான் தன் மனைவியைக் கூட்டிக் கொண்டு தூரதேசம் போனார். காரணம் தகப்பனாரின் கோபம் அவருக்குத் தெரியும். அவர் தனக்கெதிராகவும் மந்திரப்பிரயோகம் செய்து ஏவல் விடக்கூடுமென அவர் எதிர்பார்த்தார். அதனால் தான் அவர் அங்கிருந்து போய்விட்டார்.

தகப்பனாரின் சுபாவம் அவர் அறிந்திருந்தபடியால் எங்கேயும் நிரந்தரமாகத் தங்கி இருக்க பயந்தார். ஒவ்வோரிடமாகக் கொஞ்சநாள் தங்கினார். இப்படி ஒரு தூரத்து அக்கரைக் கிராமத்தில் அவர்கள் தங்கியிருந்த போது மனைவி கர்ப்பமாக இருப்பது தெரிந்தது.

இனியும் அலைந்து திரிவது சரியல்ல என்று அங்கேயே ஓரிடத்தில் தங்கத் தீர்மானித்தார்.

ஆனாலும் அக்கம்பக்கத்தில் அதிகமாகப் பழக வேண்டாமென்று அவர் மனைவியை எச்சரித்திருந்தார்.

தான் இருந்த கிராமம் தவிர்த்து சற்று தூரத்திலுள்ள கிராமங்களில் தன் மந்திரவாதங்களைச் செய்து வந்தார். சில நம்பிக்கையான ஆட்களை அங்கே அவர் வைத்திருந்தார். அவர்கள் மூலமாக வரும் அழைப்புகளுக்கு மந்திரவாதம், ஏவல் செய்வினை எடுத்து (நீக்கி) விட்டு வருவார்.

அப்படி வர பெரும்பாலும் நள்ளிரவு ஆகி விடும். நடுநிசிகளில் காட்டுவழி வரும்போது மனைவி தனியாக இருப்பது நினைவுக்கு வரும். வேகமாக விரைவார்.

இம்மாதிரி ஒருநாள் ஒரு கிராமத்தில் ஏவல் எடுத்து விட்டு திரும்பிக் கொண்டிருந்தார். அது சரியாக நள்ளிரவு. அன்று அமாவாசை வேறு!

அவரது கையில் வெளிச்சத்திற்காக ஒரு சிறிய சூட்டுப் பந்தம் கொளுத்தி வைத்திருந்தார். நடந்து கொண்டிருந்தபோது பின்னால் கொலுசுச் சத்தம். திரும்பிப் பார்த்தார்.

வெள்ளுடை அணிந்த ஒரு பெண்ணுருவம். அவரது அருகே நெருங்கி வந்தது. அது அவரிடம் வெற்றிலைக்குச் சுண்ணாம்பு கேட்டது. அதுதான் லெச்சி என்னும் மோகினிப் பிசாசுகளின் லட்சணம்.

அவருக்கு உடனே புரிந்து விட்டது. வேறு யாருமென்றால் அங்கேயே ரத்தம் கக்கியிருப்பார்கள். ஆனால் அவரோ கைதேர்ந்த மந்திரவாதி. ஆனால் லெச்சி சாதாரண பேய்பிசாசுகளைப் போன்றதல்ல. மிகவும் எச்சரிக்கை தேவை. அவர் சூட்டுப் பந்தத்தை அணைத்துக் கீழே போட்டார்.

தன் பையிலிருந்து வசிய மையை எடுத்து மந்திரப்பிரயோகம் செய்தார். லெச்சி நடுங்கிக் கொண்டு முட்டு குத்தி அவர் முன் தலை குனிந்து நின்றாள். பையில் இருந்து ஒரு ஆணியை எடுத்து தன் கையைக் கீறி அதில் ரத்தம் தெளித்து அவள் உச்சந்தலையில் செருகி கல்லால் அடித்து இறக்கினார். லெச்சி அலறினாள். ஆனால் ஒரு சொட்டு ரத்தம் சிந்தவில்லை.

கோபாலன் ஆசான் வீடு வந்து சேர்ந்தபோது அடங்கி ஒடுங்கிய பெண்ணொருத்தி அவர் பின்னே வந்தாள். கர்ப்பவதியான மனைவிக்குப் பணிவிடை செய்யும்படி அவளை அவர் அழைத்து வந்திருந்தார்.

Saturday, September 16, 2006

ராசமணி - 3

மாலை மயங்கும் நேரம் அவர்கள் மறுபடியும் சேர்ந்தார்கள்.

பெரியவர் கதையை ஆரம்பித்தார்.

“எனக்க இளவட்டப் பிராயத்தில நானும் நல்ல வாட்டசாட்டமா இருந்தேன். அப்பல்லாம் எதுக்கும், யாருக்கும் பயப்படுற சோலி கெடையாதும். எதுக்கும் துணிஞ்ச கை தான். ஊருல என்னம் பிரச்சினையானாலும் மின்ன நிப்பம். எவனையும் துணிஞ்சி அடிப்பம்.

அப்பத்தான் அக்கரையில இருந்து ஒரு பய இங்கத்த ஒரு பொண்ணப் பாக்க நெதம் ராத்திரி வாறதா தகவல் கெடச்சி. நாங்க நாலஞ்சி பேரு ஆருக்கும் தெரியாம ராத்திரி காவல் இருந்தம்.

அவம் ஆத்தக்கடந்து கரையேறினதும் சுத்தி வளச்சி அடிச்சோம். அவன் அத எதிர்பாக்காதனால கீழ விழுந்து எழிச்சி நின்னான். அதுக்குப் பெறகு ஒரு கறங்கு கறங்குனான். அதோட நானும் கூட உள்ள ரெண்டு பேரும் தூரப்போய் விழுந்தோம். திரும்ப நாங்க எழிச்சி வாறதுக்குள்ள அவன் வேகமா ஓடிப்போயிற்றான். எங்களுக்கு ஒடம்பு வலி தீர நாலஞ்சு நாளாச்சி.

ஒரு விசயம் எங்களுக்குப் பிடிபட்டுதுது. அவன் வர்மக்கலை அறிஞ்சவன். அதான் எங்கள மூணு பேரயும் ஒருசேர அடிச்சிட்டான். எங்களுக்கும் வேகம் வந்து அடிமொற படிக்க ஆசானத் தேடி அலைஞ்சோம்.

கடசீல எங்களுக்கும் ஒரு ஆசான் கிட்டுனாரு. அவரு ஆசான் மட்டுமில்ல. பெரிய மந்திரவாதி. மந்திரவாதமுஞ் செய்வாரு. செய்வினை, ஏவல் எடுப்பாரு. அவருக்கு அடிமொற அறுபத்திநாலுந் தெரியும். வர்மமும் களரியும் அத்துப்படி.

நாங்க போய்க் கேட்டதும் அவரு சம்மதிச்சிடல்லே. பெறவு பலநாள் நடையா நடந்து கடசீல அவரு மனசு இளகி சேர்த்துக் கிட்டாரு. நாங்க மூணுபேரு அடிவேல படிக்கச் சேந்தாலும் அவருக்க அடி பொறுக்காத மிச்ச ரெண்டுபேரும் ரெண்டு கிழமையில நிறுத்திடடானுவ. நான் மட்டும் தொடர போய் அவருகிட்ட வர்மமும் களரியும் படிச்சேன்.

அவருக்கும் எம்மேல ரொம்பப் பிரியம் வந்திட்டுது. அவருக்க மந்திரவாதங்களப் பத்தியும் எனக்குக் கொஞ்சம் கொஞ்சம் சொல்லித் தந்தாரு.

அவரு ஒத்தக் கட்ட. தனிமையா வாழ்ந்தாரு. “ஆசான் ஏன் கல்யாணம் கட்டிக் கிடலை”ன்னு ஒரு நாள் நல்ல மனதையில இருக்கும்ப கேட்டேன். அப்பத்தான் அவரு ஒரு பயங்கரமான கதையச் சொன்னாரு.

(கதை வளரும்)

ராசமணி - 2

“என்ன வேய் சொல்லுதீரு? வல்லவனும் குடிச்சிட்டு வந்துருப்பாம். அவனுக்க பணத்த அடிச்சிட்டு தல்லுமுள்ளாயிருக்கும். எவனும் வசக்கேடா வச்சதில அடிபட்டு விழுந்திருப்பான். அல்லாத லெச்சியுமில்ல ஒண்ணுமில்ல.”

“இல்ல ஓய்! அப்பிடி இல்ல. இது லெச்சி தான். இதுக்கு மின்னயும் இது போல ரெண்டு பேரு செத்துக் கிடந்தினும். அதும் ரெத்தம் கக்கித்தான் கெடந்தினும். இதும் பாரும் வாயில ரெத்தம்.”

“வாயில ரெத்தம்னா லெச்சியா? என்ன ஓய்? இந்த இருவதாம் நூற்றாண்டில வந்து இப்பிடி மூட நம்பிக்கைல பேசுதீரு.”

“எலே எளவட்டப் பயலுவளா.. இருவதாம் நூற்றாண்டில லெச்சி வராதா? லெச்சிக்க சக்திய அறியாத பேசாதிய கேட்டியளா?” என்றார் செல்வராசுக்கு உதவிக்கு வந்த பெரியவர் செல்லப்பன். பனையேறி செல்லப்பன் என்றால்தான் வட்டாரத்தில் எல்லாருக்கும் தெரியும்.

“அம்மாச்சா..நீரு லெச்சிய கண்டிருக்கீரா.”

“கண்டிருக்கேனா? அது கூடப் பேசிட்டே வந்திருக்கேன்.” என்றார் பெரியவர்.

இளவட்டங்களுக்கு ஏதோ குஷி தோன்றியது. ‘இனி சந்தைக்கும் போக ஏலாது. பெரியவரை வளைத்துப் போட்டால் கொஞ்சம் சமயம் போகும்’ என்று தோன்றியது.

இதற்குள் போலீஸ் வந்து விட செல்வராசுவை அழைத்தார்கள். சவத்தை முதலில் பார்த்தவன் அவனல்லவா?

சம்பிரதாயங்கள் முடிந்து கொஞ்ச நேரத்தில் பிரேதத்தை போலீசார் எடுத்துப் போய் விட அங்கே கூட்டம் கலைந்தது.

இளவட்டங்களின் தூண்டுதலால் ஏதோ கதை பேச ஆரம்பித்த பெரியவர் பனையேறி செல்லப்பன் திடீரென நினைவு வந்தவராக “தம்பியளா..இப்பம் ஒரு சோலியாப் போறேன். வையிட்டு அந்தக் கலுங்குக்கு வாருங்க. லெச்சிக்க கதைய வெவரமாச் சொல்றேன்.” என்றார்.

அவர்கள் கலைந்தார்கள்.

(வளரும்)

Friday, September 15, 2006

ராசமணி - 1

அந்த விடிகாலை வேளையில் தலையில் குலைக்கட்டும் தூக்கிக் கொண்டு குளத்தங்கரை ஒத்தையடிப் பாதையில் நடந்து கொண்டிருந்தான் செல்வராசு. ராத்திரி உள்ள போன சாராய கிறக்கத்துல எழுந்திரிக்க கொஞ்சம் பிந்திட்டுது. எப்பவும் இதைவிட அதிசீக்கிரமே அவன் சந்தைக்கிப் போய்விடுவான் கருக்கலுக்குள் போய்ச் சேர்ந்தால்தான் வெயிலுக்குமின்ன வீடு திரும்ப முடியும். அவன் வந்துதான் வெளையில நட்ட மலக்கறியளுக்கு வெள்ளம் கோரணும்.

தூரத்தில் பொழுது விடிவதற்கான அறிகுறி கிழக்கு வானத்தில் வெளிச்சப்பட்டது. அது கண்டதும் நடைவெளி கூட்டி விரைசலாக நடந்தான். ஓட்டநடையின் வேகத்தில் எதன்மீதோ தடுக்கிக் கொண்டு விழ இருந்தான். குலைக்கட்டை இறுக்கிப் பிடித்துக்கொண்டு தடுமாறி பின் நிலைத்து நின்று தடுக்கியது எது என்று பார்த்தான்.

பார்த்ததும் தலையோடு குலையைப் பிடித்திருந்த கை நழுவியது. குலை வழுக்கி குளத்தில் விழுந்தது. அவன் தரையில் கிடந்த உருவத்தைக் கையும் ஓடாமல் காலும் ஓடாமல் பார்த்து நின்றான்.

சந்தைக்குப் போகும் இன்னும் சிலர் பேசிக்கொண்டே பின்னோடு வரும் சப்தம் கேட்டதும் தான் செல்வராசு நடுக்கத்தினின்று நழுவினான்.

“ஆருல அது செல்ராசா? இங்க என்ன செய்யே?” கீரைக்கட்டு தூக்கி வந்த இளையபெருமாள் கேட்டான். “பிரேதம்!…பிரேதம் கெடக்கு….” செல்வராசு குளறியது கேட்டதும் இளையபெருமாளோடு வந்த இன்னுமிருவர் தங்கள் சுமைகளை இறக்கி விட்டு முன்னே வந்து பார்த்தார்கள்.

குப்புறக் கிடந்த அந்தப் பிரேதம் இன்னும் நாற்றமடிக்க ஆரம்பித்திருக்க வில்லை. “ராத்திரி எவனும் குடிச்சிட்டு வந்து விழுந்திருப்பான். யாருன்னு பாருலே…உசிரு இருக்கான்னு பாரு” என்றான் இளைய பெருமாள்.

பார்த்தார்கள். அது ஒரு புதிய முகம். யாரென்று அவர்களுக்குத் தெரிந்திருக்கவில்லை. உள்ளூரென்றால் தெரியாமலிராது. இடுப்பில் அலங்கோலமாக ஒரு வேட்டி மட்டும். மற்றப்படி திறந்த மேனியாகக் கிடந்த அந்த மனிதன் யார்? எதற்காக இங்கு வந்தான்? அவர்களால் அனுமானிக்க முடியவில்லை.

அதற்கிடையில் பொழுது விடிந்துவிட கூட்டம் கூடியது. போலீசுக்குச் சொல்ல ஓடினார்கள் சிலர். மீதியைப் போலீஸ் கவனித்துக் கொள்ளும்.

இதற்கிடையே கூடியிருந்த கூட்டத்தில் ஆரம்பித்த உரையாடல்

“இந்த வளவுல இது மூணாவது சம்பவம்.” ஒருவன் ஆரம்பித்து வைக்க “ஆமால்லா! இது அந்த லெச்சிக்க வேலதான்” இன்னும் நடுக்கம் தீராத செல்வராசு பேசினான்..

(வளரும்)

Thursday, September 14, 2006

வாயிலிலே...

நமது மக்களிடையே சில விசித்திரமான நம்பிக்கைகள் உண்டு. பேய்பிசாசுகள், மந்திரவாதிகள், செய்வினை, ஏவல் உள்ளிட்ட பலவும் இதில் அடங்கும். அறிவியல் என்ன கூறுகிறது என்பதைப் பற்றியெல்லாம் கவலைப்படாமல் தங்கள் முன்னோர்கள் இத்தகைய அபூர்வ சித்திகளுடன் வாழ்ந்தார்கள் என்று பலரும் நம்புகிறார்கள்.

அது போலவே நாகமாணிக்கம் ஒரு கற்பனை என்று ஆய்வாளர்கள் சொன்ன போதும்... நூறாண்டுகள் வாழ்ந்து மனிதவாடையே படாமல் இருக்கும் நாகம் ராஜநாகமாகுமென்றும் அது நாகமாணிக்கத்தை உருவாக்கி தன் ஒளிப்பீடகமாக பயன்படுத்திக்கொள்கிறது என்பவையும் இன்றும் மக்களால் நம்பப் படுகிற ஒரு கற்பனை. இந்தப் பின்னணிகளுடன் இந்த குறுநாவல் மலர்கிறது. சிறு சிறு பாகங்களுடன் தொடர்கதையாக இதை உங்கள் பார்வைக்கு வைக்கிறேன். இதிலுள்ள பேச்சுமொழி நாஞ்சில் நாட்டின் வட்டாரமொழி.
*